எனக்கு குறித்ததை அவர் நிறைவேற்றுவார்.

யோபு சொல்லும் இன்னும் ஒரு நம்பிக்கையின் வாக்கு, "ஆண்டவர் எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்" என்பதாகும். யோபு நீதிமானா இல்லையா என்று ஆராயும் நண்பர் கூட்டம் ஒரு புறம், அவன் வாழ்வதில் இனி அர்த்தமில்லையென்று தேவனை தூஷித்து மாண்டுப்போகும்படி அறிவுறுத்தும் மனைவி இன்னொரு புறம், அவனிடத்தில் நன்மைகள் பெற்றும் அவனுடைய கீர்த்தி இனியில்லை என்பதால் அவனை அவமானப்படுத்தி எள்ளி நகையாடும் சுற்றுபுறத்தாரும்,  மாமனிதனாக வீறுகொண்டு நடமாடிய யோபுவை கண்டு அஞ்சி ஒதுங்கி பொறாமை கொண்ட இப்போது இளக்காரமாக பரிகசிக்கும் இளைய தலைமுறை வாலிபர் ஒருபுறம், என நாலப்புறமும் தன்னை புரிந்துகொள்ள முடியாத எதோ ஒருவகையில் தன்னை எதிர்த்து நிற்கும் மனிதர்களை கண்டு இனி அவனுடைய ஒரே நம்பிக்கையான தேவனையே சார்ந்து கொண்டு சொல்லுகிறான், "அவர் எனக்கு குறித்திருக்கிறதை நிறைவேற்றுவார்"

அவனுடைய விசுவாசம் நிறைவாக இருந்தபடியினால் தான் அவனால் உபத்திரவத்தின் உச்சத்திலும் தேவனை நம்ப முடிந்தது. பொதுவாக நாம் வேதனையின் ஊடாய் செல்லும்போது எந்த மனிதர்கள் கூட நமக்கு உதவ முடியாத போது தேவன் கூட மெளனமாயிருந்தால் நம்முடைய விசுவாசமும் அசைந்து விட கூடும தான். இங்கே தான் யோபின் நீண்ட பொறுமையை நாம் பார்த்து கடைபிடிக்க வேண்டும். கடைசிவரை தங்கள் விசுவாசத்தை காத்துக் கொண்ட வேத பக்தர்களும் ஊழியர்களும் நமக்கு ஒரு மாதிரியாக திருஷ்டாந்தமாக வாழ்ந்து தங்கள் ஓட்டத்தை முடித்துள்ளனர். கொஞ்ச காலம் தான் இந்த பூவி வாழ்க்கை. அது முடிந்தவுடன், மேலான மகிமையான வாழ்க்கை நமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிறது. தேவனை காணாதிருந்தும் விசுவாசிக்கும் அவருடைய மக்கள் பாக்கியவான்கள். மனம் மடிவடையாமல் இந்த விசுவாச ஓட்டத்தை தொடர்வோம் பிரியமானவர்களே.
உங்கள் உத்தியோகத்தில் உங்களுக்காக ஆண்டவர் குறித்த ஆசிர்வாதத்தை ஒருவரும் தடுக்க முடியாது.

எல்லாம் இழந்து விட்டோம், இனி நம்பிக்கையில்லை என்ற உணர்ந்த நிலையிலிலும், நன்பர்களிடம் வாதம் செய்யும் போது கூட,  யோபு அதிகமாக தேவனையே நோக்கி பேசுகிறான். காணாதிருந்தும் தேவன் மேலிருந்த அந்த விசுவாசம் கொஞ்சமும் யோபுவிற்கு குறையவில்லை. ஒருவேளை ஒரு துர்ச்செயல் நடந்தவுடன் அநேகரின் விசுவாசம் கேள்விக்குறியாகிவிடுகிறது. எத்தனை மக்கள் இந்த நம்பிக்கையில்லாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்? வாழ்க்கையை முடித்து கொள்ள காட்டும் அந்த வேகத்தினை தேவன் பால் திரும்பி விண்ணப்பிக்க காட்டியிருந்தால் எத்தனை பேர் வாழ்வு துளிர்விட்டிருக்கும்? உலகத்திற்கு வெளிச்சமாயிருக் வேண்டிய  கிறிஸ்தவர்களே தங்கள் வாழ்வை துரிதமாக மாய்த்து கொள்கிறார்களே. என் ஜனம் அறிவில்லாமையினால் சாகிறார்கள் என்ற வேத வசனம் எத்தனை உண்மையானது.? கிறிஸ்து பிறக்கும் முன் காலத்தில்  வாழ்ந்த யோபுவிற்கே இத்தனை பொறுமை, உறுதி இருக்குமேயானால் மனு அவதாரம் எடுத்து மனிதனின் பாவம் போக்க தன்னை பலியாக கொடுத்து நம்மை அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தால்  நீதிமானாக மாற்றப்பட்டிருக்கும் நாம் தேவ விசுவாசத்தில் எவ்வளவு  உறுதியாயிருக்க வேண்டும்?

தேவனிடத்தில் இதுவரை நன்மையை பெற்றிட்ட நாம் இப்போது தீமையை பெற்றுக்கொள்ளும் போது குறைசொல்லக்கூடாது என தன் மனைவிக்கு போதித்தவன் மீண்டும் தன் ஆஸ்தி கிடைக்கவேண்டும் என்று கேட்கவில்லை, தன் பிள்ளைகள் ஏன் சாக வேண்டும் என்று தேவனிடம்  குறை கேட்கவில்லை. இத்துடன் தனக்கு முடிவு காலம்  என்றும்  நினைத்திடவில்லை. தேவன் தன்னை குறித்து வைத்துள்ள எதிர்கால திட்டங்களை எப்படியும் இனிமேல் நிறைவேற்றிடுவார் என நம்பிய தால் தானே, தேவ வார்த்தையால் தன்னை தானே தேற்றிக் கொள்கிறான்.

இறைவன் ஒருவனை சிட்சிக்கிறாரென்றால் அதற்கு காரணம் அவனை நேசிக்கவில்லை என்பதினாலல்ல, மாறாக மகனிடத்தில் இருக்கும் குறைகளை திருத்தும் பொருட்டாக ஒரு தந்தையாகவே நம்மை அவர் மட்டாகவே தண்டிக்கிறார். ஒருவேளை எவ்வளவோ தவறுகள் செய்தும், தேவனிடத்தில கண்டிப்பு பெறாதவர்கள் சிலாக்கியம் பெற்றவர்களல்ல, அவர்களை  முறையற்று பிறந்த, கேள்வி கேட்கும் தகப்பன் ஸ்தானத்தில் யாரும் இல்லாத வேசியின் பிள்ளைகள் என வேதம் அறிவுறுத்துகிறது.
இது ஒரு சிட்சையெனில், நம்முடைய மாமிசத்தில் உள்ள அழுக்கான சுபாவத்தை பொன்னை புடமிடுமிறது போல தேவன் நம்மை உருக்கி சுத்தமான பொன்னாக மாற்றுவது  இன்னொரு வகை சிட்சை.
எது எப்படியாயினும் நம்மை பரலோக இராஜ்ஜியத்திற்கு முன்குறித்த ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் குறித்திருக்கிறார். நமக்கு எல்லாமே குறிக்கப்பட்டுள்ளது. நாம் பேசும் மொழி, நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பெற்றோர் பிள்ளைகள், உறவினர். எல்லாமே முன்குறிக்கப்பட்டுள்ளது.  திருமணம் கூட பரலோகத்தில் நிச்சயமாகிறது என்றும் நாம் சொல்ல கேட்கிறோம்.

வெறும் சிட்சையினால் மாத்திரம் நாம் உபத்திரவப்படுகிறதில்லை. நம்முடைய உடல், குடும்பம், சூழ்நிலைகள் அமைந்தவிதத்தில் நமக்கு துன்பங்கள் வருவதுண்டு. நாம் செய்த தவறினாலோ, நமக்குரியவர் செய்த தவறினாலோ நமக்கு சில புரியாத தீமைகள் நடக்கிறது. இது தேவ நாமம் மகிமையடையும்படிக்கே நம் வாழ்வில் நடக்கிறது.

அடியேன் சிறுவயதில் நல்ல நண்பன் பத்திரிகையில் படித்த உண்மை சம்பவத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
வெளிதேசத்தில் ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்கோ பாவம் கால் பாதங்கள் மிகவும் அகலமாக வித்தியாசமாக பார்ப்பதற்கு சற்று அகோரமாக இருந்தது. அவள் நண்பர்கள் மற்றவர்கள் அவளுடைய அகலமான பாதங்களை பார்த்து கேலியாக கிண்டல் செய்வார்கள். அவளுக்கும் தான் அதில் மிகவும் சங்கடம். அதோடு மற்றவர்கள் செய்யும் கேலி அவளை மிகவும் வேதனைப்படுத்தும். ஆண்டவர் தன் பாதங்களை ஏன் மற்றவர்களை போல சராசரியாக சரியான அளவில் படைத்திருக்க கூடாது என அவள் நொந்து தான் போயிருக்கக்கூடும். நாட்கள் கடந்தன. அவள் இப்போது ஒரு வாலிப பெண். இப்போதும் அவளுடைய வித்தியாசமான பாதங்களை மற்றவர்கள் கேலி செய்கிறார்கள். ஒரு நாள் வந்தது. அவள் தன்னை தேவனுடைய திருப்பணிக்கென்று ஒப்புக் கொடுத்தாள். மலைதேசத்து மக்களுக்கு அருட்பணி செய்ய ஒரு குழுவினரோடு ஒரு ஸ்தாபனத்தால் அனுப்பப்பட்டாள். மலைமீது ஏறித்தான் அங்குள்ள மக்களை சந்திக்க வேண்டுமென்பதால் ஒவ்வொரு நாளும் அவர்கள் மலை ஏறுவார்கள். எவருக்கும் மலையேறும் அனுபவம் இல்லாத படியால் அந்த குழுவினர் மலையேற சிரமப்படும் போது இந்த இளம்பெண் மாத்திரம் சர்வசாதாரணமாக மலையேறி முன்னேறி சென்றாள். மற்றவர்களுக்கு ஆச்சரியம், அவளுக்கும் தான்.  அந்த சமயத்தில் தான் அவளுக்கு புரிந்தது. எதிர்காலத்தில் மலைகளில் ஏறி நடந்து செய்யவிருக்கும் திருப்பணிக்காகவே  அவளுடைய பாதங்கள் அகலமாக படைக்கப்பட்டிருந்ததை எண்ணி தேவனுக்கு நன்றி செலுத்தினாள்.
ஆம் எனக்கன்பானவர்களே! நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு கேலி கிண்டல் சிரிப்பாக இருக்கலாம். நமக்கு ஏன்  இந்த பெலவீனம், குறைபாடு்? ஏன் எனக்கு பெற்றொரில்லை, ஏன் குழந்தையில்லை? ஏன் எனக்கு மற்றவர்கள் போல வசதியில்லை என்று நீங்கள் நொந்து போகவேண்டாம். உங்கள் வந்திட்ட வியாதியை பார்த்து இந்த உலகம் உங்கள் கதை முடிந்தது என்று சந்தோஷமடையலாம். கர்த்தர் அறியாமல் ஒரு தலை முடியாகிலும் கீழாக விழாது. நம்பிக்கையை மாத்திரம் இழக்காதிருங்கள். யோபை போலவே  வியாதியின் கோரத்திலிருந்து மீட்டவர் உங்களுக்கும் விடுதலை கொடுத்து உங்களை கொண்டு உங்கள் சரீரத்தை கொண்டு அவர் குறித்த வேலையை நிறைவேற்றியே தீருவார்.
கர்த்தர் என்றைக்கும் ஆளுகை செய்கிறார். நம்முடைய எதிர்காலத்தை குறித்து கரிசனை உடையவராயிருக்கிறார். அவர் நமக்கு காரணமில்லாமல் எதையும் அனுமதிக்கிறதில்லை. அவர் நம்மை நேசித்தப்படியினால் தம் சாயலாகவே நம்மை படைத்திருக்கிறார்.
நம்மை படைத்தவர் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் எப்படியாக இருக்கவேண்டுமென நாம் பிறக்கமுன்பாகவே எல்லாவற்றையும் குறித்திருக்கிறார்.
படைப்பு என்று ஒன்று இருந்தால் படைப்பாளி ஒருவர் நிச்சயம் இருக்கவேண்டும். மனிதனும், மற்ற ஜீவராசிகளும், இந்த எண்ணிலடங்கா பிரபஞ்சமே இறைவன் இருப்பதின் ஆதாரங்கள் தான்.
நம்மை படைத்த தேவன் அன்பாகவே இருக்கிறார். அவரை விசுவாசிக்காத மனிதர்களையே அவர் நேசிக்கும்  போது அவரை நம்பி எல்லாவற்றிலேயும் தேவனை யே சார்ந்து வாழும் மனிதனை அவர் நேசிக்காமல் இருப்பது எப்படி?
அவர் நமக்கு நன்மையல்லாமல் தீமை செய்கிறதில்லை. அவர் உங்களுக்கு குறித்ததை எப்படியும் நிறைவேற்றுவார். பயம் வேண்டாம்.
ஆண்டவர் நம்மோடிருக்கிறார்.

Comments