1. கர்த்தர் நம்முடைய சிறையிருப்பை திருப்புவார்.



தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்;
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
- யோபு 42:2

புது வருட வாக்குத்தத்தம் 2016

நாட்களை விசேஷித்து கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்து கொள்ளுகிறான்.நாம் கூட இந்த ஒரு காரணங்களுக்காகவே புதிய வருடம் ஆசரித்து அதனை கர்த்தர் பாதத்தில் இருந்து பெற்று கொள்கிறோம். 2015ம் வருடம் முடிந்து விட்டது. நம்மில் எத்தனை பேருக்கு இது ஆசீர்வாத ஊற்று பெருக்கேடுத்த வருடம்? என்று கேட்டால் ஒரு சிலர் சந்தோஷமாக தலையாட்டலாம்... உங்களுக்கு மேலும் புதிய ஆசீர்வாதங்கள் இந்த புதிய வருடம் கொண்டு வருவதாக...!
ஆனால்....! ஏன் எனக்கு அந்த காரியம் சம்பவித்தது? ஏன் எனக்கு இந்த துயரம் நேரிட்டது? என்னை தேவன் ஏன் கைவிட்டு விட்டார் என அங்கலாய்த்து இருதயத்தில் துக்கம் அடைக்க கேள்வி கேட்பீர்களானால், அன்பான சகோதரனே, சகோதரியே இந்த செய்தி உங்களுக்கானதே...!

உங்களை போலத்தான் ஒரு பக்தன் தன் தாங்கொண்ணாத துயரங்களுக்கு காரணம் புரியாமல் ஏன் எனக்கிந்த தீங்கிழைத்தீர் ஆண்டவரே... என முன்பொரு காலத்தில் வேதனையின் எல்லைக்கே சென்று திரும்பிட விடைத்தெரியாமல் வெதும்பி கொண்டிருந்தான்... அவனை போல நிச்சயமாக நாம் யாரும் துன்பம் அனுபவித்திருக்க முடியாது... நீதிமான்களுக்கெல்லாம் நீதிமானான யோபு கிழக்கத்திய நாடுகளில்... மிகவும் பிரசித்திப்பெற்ற யசுவரிவானாயிருந்தான். எந்த ஒரு சிறு தவறும் நேர்ந்திடாமல் கர்த்தருக்கு மிகவும் பயந்து உத்தமனாயிருந்தான். என்றாலும் ஒரு நாள் வந்தது. அந்த ஒரே நாளில் அவனுடைய ஆஸ்தி, சொத்து, சம்பத்து என அவனுக்கிருந்த எல்லாவற்றையும் இழந்து அவனுடைய 10 பிள்ளைகளையும் அடுத்தடுத்து பறிகொடுத்தான். அப்போதும் யோபு தேவனுக்கு விரோதமாக எதுவும் பேசிடவில்லை.
(யோபு 1:20-22.) அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து:
நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை


தான் நேசித்த தன் 10 பிள்ளைகள் மரணித்தப்பிறகும், ஆஸ்தியெல்லாம் இழந்தப்பின்னும் தன் விசுவாசத்தில் உறுதியாயிருந்த யோபு எப்பேற்பட்ட நீதிமானாயிருந்திருக்கவேண்டும்?
ஆனாலும் வாதை யோபினை விட்டப்பாடில்லை... கொஞ்ச நாளில் யோபின் சரீரம் அவன் உச்சந்தலை துவங்கி பாதம் மட்டும் ஒரு இடம் பாக்கியில்லாமல் கொடிய பருக்களால் வாதிக்கப்பட்டது....
அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.யோபு 2:8
அத்தனையும் மொத்தமாய் இழந்தவனுக்கு மிச்சம் இருப்பது அவனுடைய மாம்சமான ஓரே மனைவி மட்டும்... அவளும் அவன் பாடு உக்கிரமானது என அறிந்தவளாக,
(யோபு 2:9-10) அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள்.
அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.

நம் வேதம் இப்படித்தான் சொல்கிறது.... இந்த யோபு தவறிப்போய்கூட தன் உத்தமத்தில் இருந்து பின்வாங்கிடவில்லை. முறுமுறுக்கவில்லை... ஏன் என்னை மட்டும் தேவன் இப்படி சோதிக்கிறார் என்று கேள்வி கணைகளை வீசிடவில்லை...
ஒருவேளை இது போன்ற சூழ்நிலை நம்மை போன்றோர்க்கு வரும்போது, கடவுளே உனக்கு கண்ணில்லையா, இதயமேயில்லையா, ஏன் என்னை மட்டும் இப்படி சோதிக்கிறீர் என்ற கேட்டுருந்தால் இன்றைக்கு நமக்கெல்லாம் ஒரு பாடத்தினை தேவன் இந்த சிறிய வலைப்பதிவு மூலம் சொல்லித்தரப்போகிறார்...

(யோபு 2:11-13) யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும் ஓருவரோடே ஒருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள். அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு, வந்து, அவன் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்.
உடல் உருத்தெரியாமல் போன யோபின் வாழ்வு இனி துளிர்விடுமா? ஆம் நம்முடைய வாக்குத்தத்தம் இனி தான் துவங்குகிறது.... தொடர்ந்து கவனிப்போம்.

1. கர்த்தர் நம்முடைய சிறையிருப்பை திருப்புவார்.
பிரியமானவர்களே, தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. - மத்தேயு 19:26 
யோபினை துக்கம் விசாரிக்க வந்த 3 நண்பர்களும் அவன் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கவேண்டும்... அதனால் தான் அவனை உருத்தெரியாமல் பார்த்தபொழுது, 7 நாட்கள் அவனோடு ஏதும் பேசிடாமல் மெளனமாய் அவனோடு அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம் தன் பிறந்த நாளினை சபித்து தன் துயரம் குறித்து விவரிக்கிறான் யோபு... அங்கே தானே அந்த நீ_____ண்ட உரையாடல் துவங்குகிறது....
ஒருவர் மாறி ஒருவர் பேச்சை தொடர்கின்றனர்....எந்த தவறும் செய்யாமல் தேவன் யாரையும் தண்டிப்பதில்லை என்று கூறுகின்றனர்... நல்லது செய்தால் ஆசிர்வாதமெனவும் யோபு ஏதோ தேவனுகெதிராக தவறு செய்ததினால் தான் அவனுக்கு இந்த வாதை என்று வாதிடுகின்றனர். தேவனே தங்களை ஞானத்தினால் நிரப்பியுள்ளதாகவும் யோபுவிடம் தாங்கள் பேசுவது தேவ வார்த்தை என்றும் துணிந்து பொய்யாய் பேசுகின்றனர்... யோபின் வார்த்தைகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. யோபு செய்யாத பாவத்திற்கு அவனை தேவனிடம் மனம்திரும்ப சொல்கின்றனர். ஒருவேளை யோபை போல நாம் பாடனுபவிக்கவில்லையென்றாலும் கூட அவனை போல ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் சந்தித்துவருகிறீர்களா? நாமும் கூட நம்முடைய துயரத்தில் வேதனைப்படும்போது நம்மை நேசிப்பவர்கள் ஏன் தேவ மனிதர்கள் கூட நம்மை குற்றப்படுத்தி ஈட்டியாய் வார்த்தைகளை எறிவார்கள்.... தேவப்பிள்ளையே சோர்ந்துப்போகாதே உன் சிறையிருப்பை கர்த்தர் திருப்புவார்... அப்பொழுது உன் நீதி விளங்கும். உன் துக்க நாட்கள் முடிந்துவிட்டன... இனியெல்லாம் சுக வாழ்வு தான்.

(யோபு 42:7-10) கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார். அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார். யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

அருமையான சகோதரனே, சகோதரியே... நெடுகவே உங்கள் வாழ்வில் சோதனை தொடர்வதில்லை.. நாம் அனுபவிக்கும் பாடுகளை லேசான உபத்திரவமென சத்திய வேதம் போதிக்கிறது.  நாம் சோதிக்கப்படும் போது யோபுவிற்கு கூட இல்லாத ஒரு பாக்கியம் நமக்கு உண்டு.... ஆம் நம் ஆண்டவர் இயேசு நம்மை போல பாடனுபவித்ததினால் நமக்கு உதவி செய்கிறார். அவர் உங்களை கொண்டு செய்ய நினைத்து தடைப்படாது.
சோர்ந்துப்போகாமல் உங்கள் பிரச்சனைகளுக்காகவே ஜெபித்து கொண்டிராமல் மற்றவர்களுக்காகவும் ஜெபியுங்கள். கர்த்தர் உங்கள் சிறையிருப்பை திருப்பி மீண்டும் ஆசிர்வாதமாக்குவார்.


Comments