டிரிங்..டிரிங்... டிரிங்... 


போன் தொடர்ந்து சிணுங்கிட அவசரமாய் எடுத்தார் பரந்தாமன் 


"ஹ..ஹலோ..",

குரலில் பதட்டம் தெரிந்தது. 


"நீங்க மிஸ்டர் பரந்தாமன்தானே?",

எதிர் முனையின் கேள்விக்கு, 


"ஆ.ஆமாங்க", என பதிலளித்தார். 


"நான் சொல்றத மட்டும் கவனமா கேட்டுக்கங்க... காணாம போன உங்கப் பையன் ஜோஷ்வா இப்ப எங்ககிட்ட தான் இருக்கான்..ஸ்கூல்ல இருந்து அவனைக் கடத்தினது நாங்கதான்.. நான் சொல்ற இடத்துக்கு ஐம்பது லட்ச ரூபாய் பணத்தோட வந்தா,எந்த சேதாரமும் இல்லாம உங்க பையன் உங்களுக்கு திரும்பவும் கிடைப்பான்..இதுல ஏதாவது தப்பு நடந்தா ஆதாரம் இல்லாம அவனை அழிச்சிடுவோம்" 


மிரட்டலால் மிரண்டார் பரந்தாமன். 


"சா..சார்....என் பையன ஒண்ணும் பண்ணிடாதிங்க..நான் சாதாரண பேங்க் கிளார்க்..என்கிட்ட அவ்வளவு பணம்லாம் இல்லை சார்" 


பரந்தாமனின் பதிலைக் கேட்டு எக்காளமிட்டான் எதிர்முனை.. 


"வாவ்..வெரி குட் ஜோக் பரந்தாமன்..நாங்க ஆழம் தெரியாம காலை விடற குரூப் இல்லை.. உனக்கு இன்னும் ஆறு மணி நேரம் டைம் தரோம்..அதைத் தாண்டி ஒரு நொடி ஆனாலும் உன் பையன் அவனோட சுண்டு விரலை இழக்க வேண்டி வரும்" 


வேறு வழியின்றி மிரட்டலுக்கு அடிபணிந்தார் பரந்தாமன். 


"அப்படிலாம் எதுவும் பண்ணிடாதிங்க சார்.எனக்கு இருக்கறது ஒரே புள்ளை.. எப்படியாவது பணத்தை ரெடி பண்ணிக் கொடுத்துடறேன்..

பையன் நல்லாருக்கானானு அவன் கிட்ட ஒரு வார்த்தை பேச முடியுமா சார்" 


"ஓ தாராளமா...ஒன் மினிட்.." ,பதில் அளித்த மறுமுனை அங்கே பேசுவது இங்கே தெளிவாகக் கேட்டது.. 


"டேய்..அந்த பொடியனை இங்கே கொண்டு வாங்கடா.." 


தொடர்ந்து காலடி சத்தங்கள் கேட்க, சிறுவனின் அழு குரலும் கேட்டது. 


"இந்தாடா உங்கப்பா லைன்ல இருக்கார்... பேசுடா..." 


பையன் போனை வாங்கிட, மறுமுனையின் தத்தளித்தார் தந்தை.. 


"ஜோஷ்வா.. " 


"டாடி.....எனக்கு ரொம்ப  பயமா இருக்கு டாடி..சீக்கிரமா வந்து என்னை கூட்டிக்கிட்டு போங்க" 


"நீ பயப்படாம இரு ஜோஷ்வா..டாடி சீக்கிரமா வந்து உன்னை கூட்டிகிட்டு வந்திடுவேன்.." 


"ம்..சீக்கிரமா வாங்கப்பா..." 


பேசிக் கொண்டிருக்கும் போதே போன் பிடுங்கப்பட்டது. 


"டேய் பேசுனது போதும் போனைக் கொடு.. பரந்தாமன்,உன் பையனோட குரலை கேட்டாச்சுல்ல...இந்த மாதிரி கடத்தல் பணம் கைமாத்தறதுக்குன்னே இருக்கற பரங்கிமலைக்கு இன்னைக்கு சாயந்தரம் ஆறு மணிக்கு டாணு பணத்தோட வந்திடு..குட்பை.." 


போன் கட்டானது.

-------

காட்சி2:

பரங்கிமலை,

மாலை ஆறு மணி... 


பரந்தாமன் மொபட்டில் மலையின் அடிவாரத்தை அடையவும்,அவரது மொபைல் சிணுங்கவும் சரியாக இருந்தது.. போனை எடுக்க... 


"பரந்தாமன்..உன்னை நாங்க தொடர்ந்து வாட்ச் பண்ணிக்கிட்டு தான் இருக்கோம்..பணம் சரியா இருக்குமில்ல.." 


"ம்ம்..எல்லாம் பழைய நோட்டுகள்தான்.." 


"வெரிகுட்..அதோ, உனக்கு ரைட் சைட் தெரியற மாருதி ஆம்னியோட டோர ஓபன் பண்ணி,பணத்த வைச்சுட்டு திரும்பி பார்க்காம போயிடு. பையன் வீட்டுக்கு வந்திடுவான்" 


அதற்கு தலையசைத்த பரந்தாமன் பேசியபடி  பணத்தை வைத்து விட்டு நகர்கிறார்.

------

காட்சி3:

பரந்தாமன் வீடு.. 


பரந்தாமன் வீட்டிற்குள் நுழைந்ததும் ஓடி வந்து அணைத்துக் கொள்கிறான் மகன்.. 


"டாடி..டாடி...",மகனின் பாச மழையில் நனைந்தபடி 


"ஒண்ணும் இல்ல ஜோஷ்வா..பயப்படாத..

எல்லாம் சரியாயிடுச்சு" 


என்றவர் மகனை இறுக அணைத்துக் கொள்கிறார்.... 


முதல் முற்றும்

--------------------



"என்ன அதுக்குள்ள முடிஞ்சிருச்சா...ரொம்ப சிம்பிளா இருக்கே...நாம எதிர்பார்த்த ட்விஸ்ட்  எதுவும் நடந்ததா காக்கிநாடன்?" 


தன் முன் விறைப்பாய் நின்ற இன்ஸ்பெக்டரிடம் வினவினார் அருள்வினாயக். 


"எல்லாமே நாம எதிர்பார்த்த மாதிரிதான் நடந்திருக்கு சார்.. பரந்தாமன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கௌரிசங்கரோட பினாமியா இருக்கலாமுனு நமக்கு வந்த ரூமர் உண்மையாகிடுச்சு..இதைக் கண்டுபிடிக்க அவரோட குழந்தையை கடத்தி,மிரட்டற நம்ம ஆபரேசன் முழு சக்சஸ்.. சாதாரண வாழ்க்கை வாழற ஒரு மிடில் கிளாஸ் பேங்கர்,ஆறு மணி நேரத்துல ஐம்பது லட்சம் புரட்டி கொடுத்துருக்காரு.

இதை விட வேற என்ன ப்ருப் வேணும் சார்?" 


காக்கிநாடனின் பதிலுக்கு தலையசைத்த  அருள்வினாயக், 


"யெஸ்..யெஸ்...ஐ நோ..அப்ப உடனே கிளம்புங்க..இப்பவே பரந்தாமன் வீட்ட ரெய்ட் பண்ணிடுவோம்" 


வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வண்டிகள் வரிசையாய் பரந்தாமன் வீட்டை நோக்கி கிளம்பின... 


இரண்டாவது முற்றும்

-------------------- 


வருமான வரித்துறை சீஃப்புடன் அரசு வாகனத்தில் பயணமாகிக் கொண்டிருந்த காக்கிநாடனின் மொபைல் அலறியது..

எடுத்து பேசியவரின் முகம் விதவிதமாய் மாற,அதிர்ச்சியுடன் பேசி முடித்தார்.. 


"சா...சார்..அந்த பரந்தாமன் நம்மள முட்டாளாக்கிட்டான்" 


"ஏன்,என்ன ஆச்சு காக்கிநாடன்?", பதறினார் அருள்வினாயக். 


"பரந்தாமன் பினாமி மட்டுமில்ல சார்.. பணமதிப்பிழப்பு நடந்தப்ப நிறைய அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கான பழைய நோட்டுகளை புதுசா மாத்தி கொடுத்தும் நிறைய சம்பாரிச்சிருக்கான்.." 


"ஓ மை காட்..",என்றார் வினாயக். 


"இப்ப அவன் கொடுத்த பழைய நோட்டுகள் எல்லாம் நிஜமாவே பழைய நோட்டுகள்தான் சார்...பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னாடி நாம பயன்படுத்தின நோட்டுகள்..இதை இப்ப கொடுத்தது அவன்தானும் நாம ப்ரூப் பண்ண முடியாது.

இதையே இவ்வளவு பிளான் பண்ணி பண்ணினவன்,நிச்சயம் மாட்டிக்கிற மாதிரி எந்த தடயத்தையும் மிச்சம் வைச்சிருக்க மாட்டான். நம்ம நிலைமை திருடனுக்கு தேள் கொட்டின மாதிரிதான்..",

கலக்கமாய் காக்கிநாடன் கூற... 


"ஓ புல்ஷிட்..அவன் வல்லவனுக்கு வல்லவனு காமிச்சுட்டான்...அவன சிக்க வைக்க இன்னோர் சம்பவம் நடக்காமயா போயிடும்.காத்திருப்போம்..வண்டிய திருப்புங்க..இங்க பக்கத்துல ஆனந்தபவன் இருக்கு..அங்க மசால் வடை நல்லாயிருக்கும். சாப்பிடுட்டு போவோம்..." 


புன்னகைத்தார் வினாயக். 


மூன்றாவது முற்றும்..

----------------- 


"அப்பா நீங்க நல்லவர் இல்லையாப்பா?",

அன்றைய இரவில் பரந்தாமனின் மார்பில் தலை சாய்த்திருந்த

ஜோஷ்வா கேட்க பரந்தாமன் தடுமாறினார்.. 


"என்னை கடத்திட்டு போனவங்க நீங்க திருடன்,தப்பானவர்னுலாம் பேசிக்கிட்டாங்கப்பா.. அதான்.." 


பதில் இல்லாமல்,

"அ...அது வந்து", என  பரந்தாமன் தடுமாற 


"எனக்கு நல்ல அப்பாவத்தான் பிடிக்கும்..கெட்ட அப்பாவ பிடிக்காது", என்றான் மகன்.. 


"உன் அப்பா எப்பவும் நல்ல அப்பாதாண்டா கண்ணு", என சொல்லியபடி ஜோஷ்வாவை இறுக்க அணைத்துக் கொண்டார்..அவர் மார்பில் சாய்ந்தபடியே மகன் தூங்கியதும் அவன் நெற்றியில் முத்தமிட்டார்... 


"நீ தூங்கி எழுந்திரிக்கறப்ப இந்த கெட்ட அப்பா இங்க இருக்க மாட்டேன் ஜோஷ்வா..நல்ல அப்பாவா கொஞ்ச நாள் கழிச்சு திரும்ப வருவேன்..." 


மனதுக்குள் யோசித்தபடியே தன் மொபைலை எடுத்து கமிஷனர் எண்ணுக்கு குறுஞ்செய்தியை அனுப்பினார். 


நாளை காலை நான் சரணடைகிறேன்... 


கடைசி முற்றும்... 


நன்றி

Comments